Wednesday, May 7, 2008

நான் பார்த்த ஊரும் நீ பார்த்த ஊரும்

நான் பார்த்த ஊரும் நீ பார்த்த ஊரும்


நான் நீ இங்கே; நீ அங்கே.
நீயும் நானும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்
நம் ஊரைப்பற்றி.
அன்றைக்கு எறித்த நிலா
பின் என்றைக்கும் எறித்ததில்லை.
முன் வீட்டு குருசாமி
தம்பியின் தாத்தா
அன்பான அப்பாச்சி
இப்படி
ஊரின் அலங்காரம் ஏதும்
இன்றக்கு அங்கேயில்லை.
வலப்பக்க தோழனாயிருந்தவன்
இடப்பக்கம் மாறி
சாம்பலுமாகிவிட்டான்.
கொழும்பு குயிலை பார்த்தால்
சுஜீவன் நினைவு தோன்றும்.
இன்றோ
வேறெவரோ உனக்கு தோன்றகூடும்.
அவனுக்கு அதுகூட மறக்ககூடும்.
நான் பார்த்த ஊரும்
நீ பார்த்த ஊரும் ஒன்றுதான்.
நீயும் நானும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்
நம் ஊரைப்பற்றி.
ஆனால்
நான் பார்க்கும் ஊரும்
நீ பார்க்கும் ஊரும் வெவ்வேறு.
ஒளியை வேகமானது மனமென்பார்கள்.
அது சற்று தடம் புரண்டதால்
எனக்கு மட்டும் சாத்தியமாகியுள்ளது
ஐன்ஸ்டைன் கண்ட காலயந்திரம்.

2 comments:

கிடுகுவேலி said...

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா? உயரப்புலம் வீட்டு வேம்பு, சுதுமலை ஆனைக்கோட்டை வீதி, எல்லாம் பசுமை நினைவுகளை அள்ளித்தரும் இடங்கள்."அப்பிளும் ஆரஞ்சும் அறு சுவை உணவுகள் இங்கு கிடைத்தாலும் அன்னை தமிழ் மண்ணில் கால் மிதித்து அள்ளி சோறு தின்னும் சுகம் வருமா?" நினைத்தால் நெஞ்சை அடைக்கும் நினைவுகள். நினைக்கவும் முடியவில்லை. நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. நினைவுகள் எப்பொழுதும் சுகமான கொடுமைகள்.

அருண்மொழிவர்மன் said...

இந்தக் கவிதை பிரத்தியேகமாக விசாகனை, தயாவை முன்வைத்து எழுத்ப்பட்டது. இதில் பெயர் குறிப்பிடப்படும் அனைவரையும் நன்கறிந்தவர்களும், அக்கால கட்டங்களில் என்னுடன் இருந்தவர்களும் இவர்களே.

நேரில் கண்டு பத்தாண்டுகள் கடந்தும் நெருங்கிய பந்தம் கொண்டு, எப்போதும் என்னுடன் நெருக்காமாகவே உள்ள உறவுகள் பெரிதும் கிடைத்த கால கட்டம் அது.