Friday, May 16, 2008

நானெப்படுவது நானல்ல

(அன்பு, பாசம், நன்றி, நட்பு, காதல் என்று நான் உணர்ந்த அடிப்படை பந்தங்கள் பலவும் கேள்விக்குறிக்குள்ளான ஒரு காலப்பகுதியில் ஒரு தனிமையான பொழுதினில் எழுதப்பட்டது)

கவிதைகள் வாசித்து
காதல்கள் பல செய்வர்.
கவிதைக்கு பொய்யழகு என்று
வெறும் பொய்யாலே கவி செய்வர்.
காதலையே கொலை செய்வர்
கவிதைக்கும் பழி சேர்ப்பர்.

கனிவான கவிதை
பொய்யான போதினிலே
மெய்யான கவி கண்டு
என்னை நான் சரி செய்தேன்.
“நதிக்கரை ஓரம் பார்த்து
நாணலில் கூரை செய்து…”
என்றெல்லாம் கவிகேட்டு
என்னுள் நான் உருவானேன்.

இயற்கையோடு இசைவானேன்
இசை மீது பசி கொண்டேன்
இறைவனுக்கே
என்னை இறை தந்தேன்

சேறாடும் தோழரின்
தோலாடும் வேர்வையே
பார் மீது பெரிதென்று
முழுமனதாய் நான் சொன்னேன்.
உரமான கால்கள் மிதித்து
உரமிட்ட வயலெல்லாம்
நடையிட்டு நான் ரசித்தேன்
எல்லாம் மாறும்,
தொடர்ந்து மாறும் என்று
வான் சொன்ன போதனையை
நாள்தோறும் நான் கண்டேன்.

இயற்கையை ரசித்து
இயற்கையை மதித்து
இயற்கையாய் வாழ்ந்தேன்.
செயற்கையை தொலைத்தேன்.
இயல்பின்றி போனேன்.

கருவாட்டு சந்தையிலே
ரோசாப்பூ விற்றேன்.
கசாப்பு கடையிலே
மல்லிகைப்பூ விற்றேன்.
ஆம்
நான் வினோதம் தான்.
வாலறுந்த நரிக்கூட்டத்தில்
வாலுள்ள நரி வினோதம்.
முட்டாள்கள் சபையிலே
படித்தவன் பைத்தியம்.
வாழ்ந்த காலத்தில்
பாரதி பைத்தியம். தன்
கொள்கைகள் சொல்கையில்
கலிலியோ பைத்தியம்.

ஆனால்
அர்த்தமுள்ள வினோதங்கள்
இருக்கையிலே வீசப்படும்.
மறைந்தபின்,
பேசப்படும், எழுதப்படும், தொடரப்படும்.
சில சமயம்
தொழுதலும் இடம்பெறும்.
எனவே,
நான் அறிந்ததை பிறர்
உணரும் வரை
என்னை நான் கூறமாட்டேன்.
பேச்சுப் பொருளாக மாறும்வரை
இனி நானும் பேச மாட்டேன்.

3 comments:

ashhoka said...

anbu arunmozli ungal ennagal arumaai

meta said...

பேச்சுக்கும் ஒர் எல்லை உண்டு,

பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு.

நான் அறிந்த வரையில்.........

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் அசோகா மற்றும் மேதா

அசோகா நீங்கள் இன்னும் பதிவுகள் இட தொடங்கவில்லை என்று நினைக்கிறேன் நீங்களும் எழுதுங்கள்
அனுபவங்களை கேஎட்க ஆசையாக உள்ளோம்

மேதா கருத்துக்கு நன்றி. உண்மை தான். அளவுக்கு மிஞ்சிய பொறுமைக்கு கோழைத்தனம் என்றும் பெயர் உன்Dஉ