Monday, September 8, 2008

நீ எனக்கு உயிரம்மா……

நெஞ்சமே ஆலயம்
நினைவுகள் சுகந்தம்
உந்தன் உருவமே தெய்வம்
என்று
சொன்னவை பொய்யாய் போச்சு
சோகமே சொத்தாய் ஆச்சு.
நாத்திகம் வளர்ந்ததாலே
ஆலயம் தூர்ந்து போச்சு.

வாழ்க்கையை தொடங்உம் நாளில்
வெறுமையே என்னை கொல்ல
வெறுமையை கொல்ல நானோர்
உருவினை உருவம் செய்தேன்.
கோட்டுரு கடந்த வடிவை
எந்தன் கொஞ்சிடும் அழகை
கவித்துவம் கொண்ட பெண்ணாய்
கனவினுள் செதுக்கி வைத்தேன்.

கல்லூரி நாளில் உன்னை
கண்ட நாள் முதலாய் எந்தன்
உள்ளமே என்னில் இல்லை.
முழுமையாய் கொண்டாய்
என்னை.

எதிலுமே ஒழுங்கு இல்லை.
வாழ்க்கையில் ரசனை இல்லை என்று
இருந்தவன் அன்று உனால்
புதியனாய் உதயம் ஆனேன்.
கருநிற அழகே எந்தன் காவிய கருவே
கண்ணனின் குழலே
எந்தன்
உயிரே, உருவே, நினைவே அன்பே… அன்பே

கஸ்தூரி மான்குட்டி என்று
நீ
பாடிய நாளில் அன்று
மான்குட்டி போலே எந்தன்
மனமுமே துள்ளியதம்மா…
மான்குட்டி கேட்டு நின்ற
சீதை என் வாழ்க்கை என்றால்.
ராகவன் நானே கண்ணே.

மான்குட்டி மறைந்து போச்சு
சீதையும் திருடு போச்சு.
ராகவன் மட்டும் இங்கே
எனக்கு
லக்குவன் கூட இல்லை

Saturday, September 6, 2008

எனக்காக உயிர்தரும் நண்பனே……..

எனக்காக உயிர்தரும் நண்பனே……..

உனக்காக உயிரையும் தருவேன்
என்று அடிக்கடி சொல்லும் நண்பனே
உன்னை என்னால் மதிக்க முடியவில்லை

இது போலதான் இன்னும் சிலரும்
உன்னிடம்
சொல்லியிருப்பார்கள்.
கடவுளை கண்டதாய் சொல்லும்
சாமியார்கள் போன்ற
இந்த சம்பிரதாய் சொற்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

நான் வேண்டும் நட்பு
எனக்காக உயிர் தருவதல்ல
என்
அந்திம காலம் வரை எனக்கொரு
துணையாக வாழ்வது.
உனக்காக என் வாழ்வினை
எழுதி வைக்கவும் நான் தயார்
ஆனால்
உனக்காக உயிர்விட்டு
உன்னை விலக மாட்டேன்.
எனக்கு தெரியும்
என்னை தவிர உனக்காக வாழ
எவனுமே பிறக்கமாட்டான் என்று
அப்படி தான்
உனக்கும்
ஒரு நம்பிக்கை இருக்கும் என்றெண்ணுகிறேன்.
அதனால் தான் சொல்லுகிறேன்
உனக்காக உயிரையும் தருவேன்
என்று அடிக்கடி சொல்லும் நண்பனே
உன்னை என்னால் மதிக்க முடியவில்லை