Friday, May 16, 2008

நானெப்படுவது நானல்ல

(அன்பு, பாசம், நன்றி, நட்பு, காதல் என்று நான் உணர்ந்த அடிப்படை பந்தங்கள் பலவும் கேள்விக்குறிக்குள்ளான ஒரு காலப்பகுதியில் ஒரு தனிமையான பொழுதினில் எழுதப்பட்டது)

கவிதைகள் வாசித்து
காதல்கள் பல செய்வர்.
கவிதைக்கு பொய்யழகு என்று
வெறும் பொய்யாலே கவி செய்வர்.
காதலையே கொலை செய்வர்
கவிதைக்கும் பழி சேர்ப்பர்.

கனிவான கவிதை
பொய்யான போதினிலே
மெய்யான கவி கண்டு
என்னை நான் சரி செய்தேன்.
“நதிக்கரை ஓரம் பார்த்து
நாணலில் கூரை செய்து…”
என்றெல்லாம் கவிகேட்டு
என்னுள் நான் உருவானேன்.

இயற்கையோடு இசைவானேன்
இசை மீது பசி கொண்டேன்
இறைவனுக்கே
என்னை இறை தந்தேன்

சேறாடும் தோழரின்
தோலாடும் வேர்வையே
பார் மீது பெரிதென்று
முழுமனதாய் நான் சொன்னேன்.
உரமான கால்கள் மிதித்து
உரமிட்ட வயலெல்லாம்
நடையிட்டு நான் ரசித்தேன்
எல்லாம் மாறும்,
தொடர்ந்து மாறும் என்று
வான் சொன்ன போதனையை
நாள்தோறும் நான் கண்டேன்.

இயற்கையை ரசித்து
இயற்கையை மதித்து
இயற்கையாய் வாழ்ந்தேன்.
செயற்கையை தொலைத்தேன்.
இயல்பின்றி போனேன்.

கருவாட்டு சந்தையிலே
ரோசாப்பூ விற்றேன்.
கசாப்பு கடையிலே
மல்லிகைப்பூ விற்றேன்.
ஆம்
நான் வினோதம் தான்.
வாலறுந்த நரிக்கூட்டத்தில்
வாலுள்ள நரி வினோதம்.
முட்டாள்கள் சபையிலே
படித்தவன் பைத்தியம்.
வாழ்ந்த காலத்தில்
பாரதி பைத்தியம். தன்
கொள்கைகள் சொல்கையில்
கலிலியோ பைத்தியம்.

ஆனால்
அர்த்தமுள்ள வினோதங்கள்
இருக்கையிலே வீசப்படும்.
மறைந்தபின்,
பேசப்படும், எழுதப்படும், தொடரப்படும்.
சில சமயம்
தொழுதலும் இடம்பெறும்.
எனவே,
நான் அறிந்ததை பிறர்
உணரும் வரை
என்னை நான் கூறமாட்டேன்.
பேச்சுப் பொருளாக மாறும்வரை
இனி நானும் பேச மாட்டேன்.

Saturday, May 10, 2008

சூரிய புத்திரன்

புதிதாக வீடு மாறிய பொழுதொன்றில் சரியான இடவசதி இன்மையால் எனது புத்தகங்களும் இசைத் தட்டுக்களும் பெட்டிகளில் வைத்து மூடப்பட்ட்ருந்த பொழுதொன்றில் மிகுந்த மனவிசனத்தின் மத்தியில் எழுதப்பட்டது.

சூரிய புத்திரன் என்றுதான்
நான் குறிப்பிட்டுக் கொள்ளுகிறேன்.
என் எண்ணங்கள் விண்ணளவும்
கனவுகள் அது கடந்தும்
நடை பயின்று வருகின்றன.
அகிலம் அனைத்தும் ஒழுங்குபடுத்தும்
ஆற்றல் என் மனதில்.
உலகம் முழுதும் கட்டியாளும்
புத்தி என் நினைவில்.
உலகப் பேரரசு எல்லாம்
உருட்டி விளையாடும்
தினவு என் தோளில்.
ஆனால்
ஆறடிக்கு பத்தடி துண்டில்
முடங்கிவிட்டது என் வாழ்வு.


உலக உலாவுக்கு என்னை
அழைத்துச் செல்லும்
புத்தகப் பல்லக்குகள்
பெட்டிகளில் இட்டு புதைக்கப்பட்டுள்ளன.
விண்ணோடும் மண்ணோடும்
என்னை அழைத்துச்செல்லும்
கற்பனை குதிரைகள், என்
கவிதைக் குழந்தைகள்
இசைத்தட்டுகள்
குரலிழந்த குயிலாகி, எனை
பார்க்கவும் மனமில்லாமல் எங்கோ
பதிங்கிப் போயுள்ளன.
பழமையும் புதுமையும்
பகுத்திட இடமின்மையால்
பழமையும்
கட்டாயப் பழமையாக்கப்படும்
புதுமையுமாய்
உடைகள்
இலையுதிகால மரத்து அடிகளாக
தோன்றுகின்றன.


எப்போதாவது என் தோழருடன்
தொலைபேசும்போதுதான் என்
சுயம் எனக்கே தெரிகிறது.


கவிதைகளின் காதலன்,
இன்னிசை யாசகன்,
நன் நூல்களின் வாசகன்,
தீராத காதலும்
ஆறாத கோபமும் கொண்டவன்,
நிஜங்களின் நேசன்
என்றெல்லாம் என்
பரிமாணங்களை என்னால்
புரியமுடிகின்றது.


எரியும் கரித்துண்டு சூரியன்.
எரிந்தபின்
சூரியனும் ஒரு கரித்துண்டு.
இது நியாயம்.
ஆனால்,
எரிய முன்பே ஒரு சூரியன்
கரிக்கட்டையாக்கப்பட்டது ஏன்?

புலியப்பிடித்து
வளையில் அடைக்கலாமா?
அடைப்பது அடைப்பவன் திறன் எனில்
அடங்கிப்போவது
புலிக்கு
பலமா?
பலவீனமா?

Wednesday, May 7, 2008

நான் பார்த்த ஊரும் நீ பார்த்த ஊரும்

நான் பார்த்த ஊரும் நீ பார்த்த ஊரும்


நான் நீ இங்கே; நீ அங்கே.
நீயும் நானும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்
நம் ஊரைப்பற்றி.
அன்றைக்கு எறித்த நிலா
பின் என்றைக்கும் எறித்ததில்லை.
முன் வீட்டு குருசாமி
தம்பியின் தாத்தா
அன்பான அப்பாச்சி
இப்படி
ஊரின் அலங்காரம் ஏதும்
இன்றக்கு அங்கேயில்லை.
வலப்பக்க தோழனாயிருந்தவன்
இடப்பக்கம் மாறி
சாம்பலுமாகிவிட்டான்.
கொழும்பு குயிலை பார்த்தால்
சுஜீவன் நினைவு தோன்றும்.
இன்றோ
வேறெவரோ உனக்கு தோன்றகூடும்.
அவனுக்கு அதுகூட மறக்ககூடும்.
நான் பார்த்த ஊரும்
நீ பார்த்த ஊரும் ஒன்றுதான்.
நீயும் நானும் பேசிக்கொண்டேயிருக்கிறோம்
நம் ஊரைப்பற்றி.
ஆனால்
நான் பார்க்கும் ஊரும்
நீ பார்க்கும் ஊரும் வெவ்வேறு.
ஒளியை வேகமானது மனமென்பார்கள்.
அது சற்று தடம் புரண்டதால்
எனக்கு மட்டும் சாத்தியமாகியுள்ளது
ஐன்ஸ்டைன் கண்ட காலயந்திரம்.

மூன்று கிறுக்கல்கள்

குழந்தைகள்

நான் பெரிதா?
நீ பெரிதா?
பெற்றோரின் போட்டியில்
தோற்றுப்போயினர்
அப்பாவிக் குழந்தைகள்.




மரணம்

மனிதன் எழுதிய கவிதைக்கு
இறைவன் வைக்கின்ற
முற்றுப்புள்ளி





மனிதநேயம்

நம்மவர் தரப்பில்
நாற்பது பேர் காயம்
எதிரிகள் தரப்பில்
எழுபது பேர் மரணம்
இரண்டு பக்கமும் சேராமல்
அனாதைப்பிணமாய்
மனிதநேயம்

கொக்குவில்

சில ஆண்டுகளிற்கு முன்னர் என் பதின்வயது நினைவுகளை கவிதை நடையில் பதிவாக்க முயன்றேன். அந்த கொப்பி ஒற்றைகள் கிழிந்த பின்னரும் அதன் எஞ்சிய தாள்களில் எனக்கு கிடைத்தவை எடிசன் அக்கடமியில் நான் படித்த காலம் பற்றியும் ஒரு பெண்ணை வர்ணித்தும் நன் எழுதிய சில வரிகள்

கொக்குவில்

கொக்குவில் கோவில் பூமி
நான் கொள்கைகள் வகுத்த பூமி.
கோடிகள் அள்ளி கொடுப்பினும்
கோடான கோடி தலங்கள் முடிப்பினும்
பிறர்
எட்டிடா நண்பர் பெற்று
நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.

அங்கு
கல்வியை கற்க வந்தேன்
கல்வியும் கற்று கொண்டேன்
கணப்பொழுதேனும் இதயம்
பிரிந்திடா நண்பர் என்று
இருவரைப் பெற்று எந்தன்
இதயத்தை வகுத்த பூமி.

அங்கு
வாழ்ந்தவை வசந்த நாட்கள்
வசந்தமே தேடும் நாட்கள்
குட்டி கடையிலே கூடி நின்று
கூட்டமாய் பீடா தின்று
பெட்டி கடையிலே பாணும் வாங்கி
பிச்சையில் பட்டர் வாங்கி
உண்டு நாம் இருந்த நாட்கள்
இனி என்றுமே எட்டா நாட்கள்.

அவை
காவியம் நடந்த நாட்கள்
நான் வாழ்வினை உணர்ந்த நாட்கள்